சென்னை மேற்கு மாம்பலம் மேட்லி சாலையில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு சொந்தமாக மேட்லி சாலையின் சுற்று பகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருந்து வருகின்றது. கடந்த 1962 ஆம் ஆண்டு ஸ்ரீ ராமு மற்றும் சந்திர ராஜூலு ஆகியோருக்கு, மேட்லி சாலை ரயில்வே சுரங்கப்பாதை அருகே உள்ள 5 ஆயிரத்து 400 சதுர அடி கொண்ட வீட்டையும், அருகில் இருந்த நிலத்தையும், இந்து சமய அறநிலையத்துறை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது. ஆனால் குத்தகைக்கு எடுத்தவர் பல ஆண்டுகளாக வாடகை பணம் கொடுக்கவில்லை. சுமார் 66 லட்சத்து 700 ரூபாய் பாக்கி இருந்ததால், அறநிலையத்துறை அதிகாரிகள் குத்தகைதாரர்களை வெளியேற்றினர்.
அதன் பின் 3 கடைகள், 3 வீடுகள் உள்ள 10 கோடி மதிப்பிலான அந்த சொத்துகள் பல நாட்களாக பூட்டியிருந்தது. இந்த நிலையில் 134 வது திமுக வட்ட செயலாளரான G.P செந்தில்குமார், சட்டவிரோதமாக பூட்டை உடைத்து அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டார். இதை அறிந்த ஈஸ்வரன் கோவில் குடியிருப்போர் நல சங்கத்தினர், G.P செந்தில்குமாரின் அராஜகத்தை அம்பலப்படுத்த கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுக் கொடுக்குமாறு மாம்பலம் பகுதி முழுவதும் தண்டோரா போட்டனர்.
இந்து சமய அறநிலையத்துறையில் மனுவும் கொடுத்தனர். ஆனால் நிர்வாகம் ஏதேதோ காரணம் சொல்லி நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. இதுவரை தமிழ்நாடு அரசின் சார்பிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் இருக்கும் சொத்துகளை மீட்டு கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நில ஆக்கிரமிப்பு தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக திமுக உடன்பிறப்புகள்தான் இந்த வேலையை செய்து வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.