"திமுக அரசு வரலாற்றை திரித்து கூறக்கூடாது"-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். குறித்து, உண்மைக்கு மாறான தகவல் வெளியிட்ட திமுக அரசுக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் கட்சி வரலாறும், தமிழக அரசியல் வரலாறும் தெரியாத ஒருவரை முதலமைச்சராகப் பெற்றிருப்பது தமிழகத்தின் தலையெழுத்து என தெரிவித்துள்ளார்.

 திமுக அரசின் செய்திக் குறிப்பில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி வாயிலாக தனக்கென்று தனியிடம் பெற்றவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி,

ஏறிய ஏணியை எட்டி உதைத்த, செய் நன்றி கொன்ற கருணாநிதியின் வாரிசுகள் பொய்யையும், புனைச் சுருட்டையும் மூலதனமாக்கி அரசியல் நடத்துவது விந்தையானதல்ல என்று விமர்சித்துள்ளார்.

சினிமாவில் நுழையவே முடியாத நிலையில், திரைத்துறையே வேண்டாம் என்று திருக்குவளைக்கு ஓடியவர் கருணாநிதி என்றும்,
இதை அறிந்த புரட்சித் தலைவர், அவரை மீண்டும் வரவழைத்து, பட்சிராஜா ஸ்டுடியோவில் மருதநாட்டு இளவரசி படத்திற்கு வசனம் எழுத வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

இனியாவது, இந்த விடியா திமுக அரசு, தமிழக அரசின் சார்பாக வெளியிடப்படும் அறிக்கைகளில், வரலாற்றைத் திரிக்காமல் வெளியிட வேண்டும் என்றும்,புரட்சித் தலைவர் பற்றிய வரலாற்றைத் திரித்து, தவறாக அரசு செய்தி அறிக்கை வெளியிட்ட விடியா திமுக அரசிற்கு தனது கடும் கண்டனத்தையும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Exit mobile version