"மாணவர்களின் தற்கொலைக்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்"

நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஒரு கருத்தையும், அமைச்சர் மற்றொரு கருத்தையும் கூறி, குழப்பியதால்தான் மாணவர்கள் தற்கொலை முடிவை எடுப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மாணவர்களை திமுக ஏமாற்றிவிட்டதாக விமர்சித்தார். அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டப்போராட்டம் நடத்திய அதே வேளையில், மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற பொய் நம்பிக்கையை திமுக விதைத்ததாக குற்றம்சாட்டினார். நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள, திமுக அரசு கொடுத்த பொய் வாக்குறுதியே காரணம் என சாடிய அவர், மாணவர்கள் தற்கொலைகளுக்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கடந்த காலங்களில் உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்திய நிலையில், தற்போது இரண்டு கட்டமாக நடத்துவதால் திமுகவினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

அண்ணா பல்கலைகழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி  நியமிக்கப்பட்டது வாரிசு அரசியலின் வெளிப்பாடு என்று குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலுக்கு முன் பல பொய் வாக்குறுதிகளை கொடுத்த உதயநிதி தற்போது அதுகுறித்து வாய்திறப்பதில்லை என்றும் விமர்சித்தார்.

 

Exit mobile version