சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு – திமுக அளித்த வாக்குறுதி என்னவானது?

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில், எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என தி.மு.க. அளித்த வாக்குறுதி, வெறும் ஏட்டில் மட்டும்தானா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், விலை குறைவப்புக்கு வாய்ப்பில்லை என பின்வாங்கியுள்ளது. இந்தநிலையில், பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் வேளையில், வர்த்தக சிலிண்டருக்கான விலை 84 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து, ஆயிரத்து 687 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு, 850 ரூபாய் 50 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இது, இல்லத்தரசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலின்போது, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவித்த தி.மு.க. அதனை இன்னும் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதால், கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version