மேற்கு வங்க மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தாங்களும் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அண்மையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி மருத்துவர்களை சிலர் கடுமையாக தாக்கினர். இதனை கண்டித்து மேற்கு வங்கத்தில் தொடர் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே மருத்துவர்களை தூண்டிவிட்டு அரசியல் லாபம் அடைய பாஜகவும், கம்யூனிஸ்ட் கட்சியும் முயற்சிப்பதாக மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். இதனால் அதிருப்தி அடைந்த மருத்துவர்கள், தனது பேச்சுக்கு மம்தா பானர்ஜி உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும். மருத்துவர்கள் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்க மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மேற்கு வங்க மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தாங்களும் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.