தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாலை இரண்டு மணிநேரங்களாக குறைத்து உச்சநீதிமன்றம் கடந்த வாரத்தில் உத்தரவிட்டது. இந்த நேரத்தை இரண்டு மணிநேரங்கள் மேலும் நீட்டிக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசே தீர்மானிக்கலாம் என்று தெரிவித்திருந்தது.
இதையடுத்து தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கும் நேரத்தை மாற்றியமைத்து தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. காலை 6 மணிமுதல் 7 மணிவரையும் இரவு 7 மணி முதல் 8 மணிவரையும் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும்,தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய மற்றும் அதிக மாசுகளை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டு தலங்கள் மற்றும் மருத்துவமனைகள் அருகில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிசை பகுதிகள், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் முன்அனுமதியை பெற்று, பலர் இணைந்து திறந்தவெளிகளில் பட்டாசுகளை வெடிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தீபாவளி என்றாலே காலையில் பட்டாசுகள் வெடிக்கும் பழக்கம் உள்ளநிலையில், தற்பொழுது இந்த அறிவிப்பின்மூலம் பட்டாசு பிரியர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதேநேரத்தில், பட்டாசுகள் வெடிக்குமாறு அம்மாநில மக்களை புதுச்சேரி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.