தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூரில் திம்பம் மலைப் பாதையில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 20-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த கட்டண முறை அமலுக்கு வருவதாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கர்நாடகா உள்ளிட்ட இதர மாநிலங்களில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் இங்கு அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி கார் ,வேன், சரக்கு லாரி, சுற்றுலா வாகனங்கள் என அனைத்துவித வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.