காஷ்மீரில் சக வீரர்கள் மூவரை சுட்டுக்கொன்ற சிஆர்பிஎஃப் வீரர்

ஜம்மு காஷ்மீரின் எல்லை மாவட்டமான உதாம்பூரில், சிஆர்பிஎஃப் படைவீரர் ஒருவர், சகவீரர்கள் மூவரை சுட்டுக் கொன்றதுடன், தன்னைத் தானே சுட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை மாவட்டமான உதாம்பூரில் உள்ள பட்டால் பாலியா ராணுவ முகாமில் சிஆர்பிஎஃப் வீரர் அஜித்குமார் என்பவருக்கும் சகவீரர்களுக்கும் இடையில் நேற்று நள்ளிரவில் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அஜித்குமார் தனது துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் போக்ராமால், யோகேந்திர சர்மா, உமேத் சிங் ஆகிய மூன்று வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து, அஜித்குமார் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், உதாம்பூர் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version