கம்யூனிஸ்டுகள் வாய்ப்பந்தல் போடுவதில் வல்லவர்கள் என்று கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சிபி ராதா கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்லடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட சிபி.ராதாகிருஷ்ணன், அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாக விலைவாசி கட்டுக்குள் உள்ளதை சுட்டிக் காட்டினார். மேலும் வீடில்லாத ஏழைகள் அனைவருக்கும் விரைவில் வீடு கட்டித் தரப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும் கம்யூனிஸ்டுகளால் தொகுதிக்கு எந்த பயனும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், வாய்ப்பந்தல் போடுவதில் கம்யூனிஸ்டுகள் வல்லவர்கள் என்றும் குற்றம் சாட்டினார். இந்த பிரசாரத்தின் போது, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.