கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தெர்மல் ஸ்கிரினிங் பரிசோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் தொடக்கம் முதலே கொரோனா வைராஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில், திருச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையத்தில் பயணிகள் தீவிர பரிசோதானை செய்யப்பட்டு வருகின்றனர். மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ரெயில் நிலையங்களில் பயணிகள் அமரும் இருக்கைகளில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கைக் கழுவும் இடங்கைளில் கிருமிநாசினி திரவமும், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பதாதைகளும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கிரினிங் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இதேபோல், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள நளன் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதையடுத்து, பக்தர்கள் குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு, வைரஸில் இருந்து மக்களை காக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அதிகாரிகளின் அறிவுறுத்தலையும் மீறி திருநள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலாவதாக அங்குள்ள நளன் குளத்தில் நீராடி அதன் பின் சனீஸ்வர பகவானை வழிபடுவது வழக்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குளத்திலுள்ள பாதியளவு நீரை இரவோடு இரவாக தேவஸ்தான நிர்வாகம் வெளியேற்றியது மட்டுமல்லாமல், பக்தர்கள் குளத்தில் நீராடுவதற்கு தடையும் விதிக்கப்பட்டது. மேலும், காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களும், வெளிநாட்டவர்களும், கோயிலுக்கு வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.