சிலியில் தொடரும் வன்முறை…என்ன நடக்கிறது சிலியில்?

தென்னமெரிக்க கண்டத்தின் கடைக்கோடியில் உள்ள சிறிய அழகிய நாடுதான் சிலி. சுமார் ஏழரை லட்சம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட இந்தநாட்டில் சுமார் ஒரு கோடியே 75 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். முன்னர் சர்வாதிகார ஆட்சி நிலவிய சிலியில் தற்போது மக்களாட்சி முறை நிலவி வருகின்றது. ஆனாலும், அங்கு பொருளாதார சமத்துவமின்மை உள்ளதாக அதிருப்தியாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர். அதிபர் செபாஸ்டியன் பினெரா மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

சிலியின் தலைநகரான சாண்டியாகோவில் உள்ள மெட்ரோ ரயில் இந்நாட்டின் மிக முக்கிய போக்குவரத்து ஆகும். தினமும் இந்த ரயிலை மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 30 லட்சம் பேர் பயன்படுத்தி வந்தனர். கடந்த வாரம் சிலி அரசு இந்த மெட்ரோ ரயிலின் கட்டணத்தை உயர்த்தியது. இது அரசின் மீது ஏற்கனவே அதிருப்தியில் இருந்த போராட்டக்காரர்களைத் தூண்டுவது போல இருந்தது. நாடெங்கும் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். காவலர்கள் மாணவர்கள் இடையேயான மோதல்களால் போராட்டங்கள் விரைவில் வன்முறைகளாகின, பின்னர் இந்த வன்முறையில் கொள்ளைக்காரர்களும் குளிர்காய ஆரம்பித்தார்கள்.

சிலியின் தலைநகர் சாண்டியாகோவிலும் பல முக்கிய  நகரங்களிலும் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. நாட்டின் தலைநகரிலேயே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சிலி நாட்டின் அரசு கட்டண உயர்வுகளைத் திரும்பப் பெற்றது. ஆனாலும் கூட அரசைப் பதவி விலக வலியுறுத்து போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்தப் போராட்டத்தின் இடையே சாண்டியாகோவின் மெட்ரோ ரயில் எரிக்கப்பட்டதோடு, அதன் 164 ரயில் நிலையங்களும் அழிக்கப்பட்டன. அத்தோடு நாடெங்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்படுவதும் நடக்கின்றது.

கடந்த சனிக்கிழமை இரவு ஒரு சூப்பர் மார்க்கெட் தீவைக்கப்பட்டதில் அங்கு பணியாற்றிய 4 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். ஞாயிற்றுக் கிழமையன்று அரசின் ஜவுளித் தொழிற்சாலைக்கு தீவைக்கப்பட்டதில் 5 பேர் இறந்தனர். சிலி காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒருவர் பலியானார். சிலியில் நடந்துவரும் தொடர் வன்முறைகள் அந்த நாடு மட்டுமின்றி தென்னமெரிக்க கண்டம் முழுவதுமே அமைதியைக் குலைத்து வருகின்றது.

Exit mobile version