பெண்களிடையே பெருகிவரும் கான்டாக்ட் லென்ஸ் மோகம் – சிறப்பு தொகுப்பு

பார்வைக் குறைபாடு உடையவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த கான்டாக்ட் லென்ஸ், தற்போது அழகிற்காகப் பெண்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக கான்டாக்ட் லென்ஸ் என்பது பார்வைக் குறைபாடு உடையவர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பார்வைக் குறைபாடு இல்லாத கல்லூரி மாணவிகள், பணிபுரியும் பெண்கள் என அனைவருமே கான்டாக்ட் லென்சை விரும்பிப் பயன்படுத்தி வருகின்றனர். மனித உடலின் மிகவும் கவர்ச்சியான மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் உறுப்பு கண்கள். அந்தக் கண்களைத் தற்போது மேன்மேலும் அழகூட்டும் வகையில் பல்வேறு காண்டக்ட் லென்ஸ்கள் கண்ணாடிக் கடைகளில் கிடைக்கின்றன.

கான்டாக்ட் லென்ஸ் ஒரு குறிப்பிட்ட வகை `பாலிமர்களைப்’ பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இதை எளிதாகக் கண்ணில் பொருத்தவும், அகற்றவும் இயலும். மற்றும் கண்ணாடி உபயோகிப்பதால் மூக்கின் மேல்பகுதியிலும், முகத்திலும் தழும்பு உருவாகலாம். சிலர் முக்கியமான வேலைக்குச் செல்லும்போது கண்ணாடியை மறந்து வீட்டிலே வைத்துவிட்டுச் சென்று, துன்பப்படுவதும் உண்டு. இதனாலே பெரும்பாலான பெண்கள் கான்டாக்ட் லென்சையே விரும்புகின்றனர்.

இப்போது உச்சி முதல் பாதம் வரை அழகை விரும்பும் பெண்கள், உடைக்குத் தக்கபடி பல்வேறு வண்ணங்களில் காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்சுகளைப் பொருத்திக்கொள்கிறார்கள். அதில் டிஸ்போசபிள் லென்சுகளும் வரத் தொடங்கிவிட்டன.

கண்களின் தோற்றத்தைச் சீரமைக்க பிராஸ்தெட்டிக் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகின்றனர். காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்சுகள் பல நிறங்களில் கிடைக்கின்றன. உடைக்கு தகுந்த நிறத்துக்கு ஏற்றபடி அவைகளைத் தேர்வு செய்து கொள்கின்றனர் கான்டாக்ட் லென்ஸ் விரும்பிகள்.

இந்த காண்டெக்ட் லென்ஸ் அணிந்த பிறகு கண்களைக் கசக்கவோ, உருட்டவோ கூடாது. இதனை அணிந்து கொண்டு தூங்கவும் கூடாது. மேலும் 12 வயதுக்கு மேல் உள்ள அனைவருமே இந்த கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தத் தகுதி உடையவர்கள் ஆவார்கள். தற்போது பெண்களை அதிக அளவில் கவர்ந்து வரும் பொருட்களில் காண்டக்ட் லென்சும் ஒன்றாகும்…

Exit mobile version