வேளாண்மைக்கு உதவும் சிறிய வகை செயற்கைக்கோளை கண்டுபிடித்த அறந்தாங்கி பள்ளி மாணவிகள், தலைமைச் செயலகத்தில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சுபானா மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் S.F.T – SAT என்ற சிறியவகை செயற்கைக்கோளை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவிகள், முதற்கட்டமாக அறந்தாங்கி பகுதியில் உள்ள சில விவசாய நிலங்களை, ட்ரோன் மூலம் ஆராய்ந்து, சோதித்துப் பார்த்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய நிலங்களையும் இதே போன்று ஆராய்ந்து, பருவநிலை மாற்றங்களை முன்கூட்டியே கணித்து, எந்த நிலத்தில் என்ன மாதிரியான பயிர் செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
மெக்சிகோவிலிருந்து இந்த செயற்கை கோள் விரைவில் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை சந்தித்த மாணவிகள், அவரிடம் வாழ்த்து பெற்றனர்.