சென்னை ஆவடியில் உள்ள ராணுவத் தளவாடத் தொழிற்சாலையில் இருந்து இரும்புப் பொருட்களை ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற லாரிகளை ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்திய ராணுவத்திற்குத் தளவாடங்கள் தயாரிக்கும் மத்திய நிறுவனமான எச்.வி.எப் ஆவடியில் இயங்கி வருகிறது. இதில் தயாரிப்பு பொருட்கள் செய்வது போக மீதமுள்ள இரும்புக் கழிவுகளைத் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றுவது வழக்கம். இதைப்போன்று 5 டன் இரும்புக் கழிவுகளுக்கு பில் போடப்பட்டு 3 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட லாரியைத் திருமுல்லைவாயிலில் மறித்து சோதனை செய்த ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் 8 டன் இரும்பு கழிவு ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதைக் கண்டுபிடித்தனர்.
இரும்புக் கழிவுகளைப் பறிமுதல் செய்த ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் இது குறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து லாரி ஒட்டுநர்களைக் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.