மஞ்சள் கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தால், பார்ப்பது எல்லாமே மஞ்சளாகத் தான் தெரியும். அதுபோல குறைசொல்ல வேண்டும் என்று எதிர்கட்சிகள் முடிவெடுத்துக் கொண்டு பேசுவதால் ஆளுங்கட்சி செய்வது எல்லாமே தவறாக தோன்றுகிறது. அதுவும் மின்பற்றாக்குறை இல்லாத வகையில் ஆட்சி நடத்தும் அதிமுக அரசு மீது இல்லாத பழியை சுமத்தும் நோக்கில் நிலக்கரி விவகாரத்தில் புரளிகளை கிளப்பி வருகின்றன எதிர்கட்சிகள். உண்மையில் நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
நிலக்கரியை ஏன் இறக்குமதி செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு ஆண்டுக்கு 2 கோடியே 45 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்தியாவின் பிறமாநிலங்களில் இருந்து தருவிக்கப்படும் நிலக்கரியின் அளவு, ஒரு கோடியே 50 லட்சம் டன் தான். எனவே நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்க இறக்குமதிதான் செய்தாக வேண்டும். இதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, கோல் இந்தியா நிறுவனத்திடம் இருந்து ஒரு டன் நிலக்கரி ரூ.2,000-க்கு வாங்கும் நிலையில், 150 சதவிதம் அதிக விலை கொடுத்து அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரியை தமிழக அரசு வாங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பப்படுகிறது.
இந்திய சுரங்கங்களில் இருந்து வாங்கப்படும் ஒரு டன் நிலக்கரியின் விலை ரூ.2,000 தான். ஆனால் அதனை ரயில் மூலம் அருகில் உள்ள துறைமுகத்திற்கு கொண்டு சென்று கப்பல் மூலம் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்க்க கூடுதல் செலவாகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் நிலக்கரி விலை டன் ஒன்றுக்கு ரூ.3,655 ஆகிறது. குறைகூறும் எதிர்கட்சிகளுக்கு இந்த கணக்கு தெரியாமல் போனதில் விந்தை இல்லை.
அதுமட்டுமல்ல, கோல் இந்தியா நிறுவனத்திடம் இருந்து வாங்கும் நிலக்கரிக்கும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கும் இடையே தரத்தில் மலையளவு வேறுபாடு உள்ளது. குறிப்பாக மொத்த கலோரி வெப்ப அளவு, ஈரப்பதம் அளவு, சாம்பல் அளவு போன்றவை ஆகும். இதுதான் கூடுதல் விலைக்கு காரணம். நல்ல பொருளுக்கு நல்ல விலை என்பதுகூட தெரியாத அளவுக்கு ஆத்திரம் எதிர்கட்சிகளின் கண்களை மறைக்கிறது.
மூன்றாவதாக தனியார் நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததால் 33 கோடி ரூபாய் நஷ்டம் என்று பேசப்படுகிறது. இந்திய நிலக்கரி தரத்திற்கு இணையாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் ஒரு டன் விலை 3150 ரூபாய். ஆக டன் ஒன்றுக்கு 505 ரூபாய் குறைவாக இருக்கிறது. இதன் கணக்குப்படி தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி மூலம் 33 கோடி நஷ்டம் என்ற குற்றச்சாட்டுக்கு மாறாக 5.56 கோடி ரூபாய் மிச்சம் தான் ஆகிறது. இதில் எங்கே நஷ்டம் என்ற பேச்சு வருகிறது?
நான்காவதாக டெண்டர் விடாமல் விதிமுறைகளை தளர்த்தி அரசு முறைகேட்டில் ஈடுபடுகிறது என்று கூக்குரல் எழுகிறது. ஒடிசா, ஆந்திர ஆகிய மாநிலங்களில் புயல் பாதிப்பு, தமிழக அனல் மின் நிலையங்களில் குறைவான நிலக்கரி இருப்பு, 3 தனியார் நிறுவனங்கள் விதித்த விலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிலக்கரி இறக்குமதி செய்ய ஒருநேரத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களின் நிலக்கரி விலை சர்வதேச நிலக்கரி விலையைவிட 76 லட்சம் குறைவாக இருக்கிறது என்பதை இத்தருணத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சமீபத்தில் 17.5 லட்சம் டன் நிலக்கரியை இ-டெண்டர் வழியாக நாட்டிலேயே மிக குறைந்த விலைக்கு முடிவு செய்துள்ளது. இப்போதுள்ள இறக்குமதி சந்தை விலையுடன் ஒப்பிட்டால் ரூ.139 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
இவை அனைத்திற்கும் மேலாக, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேவையான நிலக்கரி உலகளவிலான திறந்த ஒப்பந்த புள்ளி மூலம் திமுக ஆட்சி காலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு கோரப்பட்டது. துபாய், சிங்கப்பூர் மற்றும் சென்னையைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் ஏலத்தில் கலந்து கொண்டன. ஆனால் இந்த டெண்டரை திமுக அரசு ரத்து செய்தது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேவையான நிலக்கரியை கொள்முதல் செய்ய வெளிப்படையான டெண்டர் சட்டத்திற்கு விலக்கு அளித்து திமுக அரசாணை வெளியிட்டது. ஏன் அவ்வாறு செய்தது என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை.
இப்படிப்பட்டவர்கள் தான் இன்று ஒளிவுமறைவற்ற ஆட்சியை நடத்தி வரும் அதிமுக அரசை நோக்கி விரல் சுட்டுகிறார்கள். உண்மை என்ன என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
Discussion about this post