28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…
சென்னை ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு ஏரியை, பசுமை பூங்காவாக மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பருத்திப்பட்டு ஏரியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
89 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் பொதுமக்கள் நடை பயிற்சிக்காக 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடம், சிறுவர்கள் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை வசதிகள் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக திறந்த வெளி அரங்கமும், சிற்றுண்டி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பறவைகள் வந்து தங்குவதற்கு ஏரியில் உள்ளே இரண்டு தீவுகள் அமைக்கப்பட்டுள்ளது. குப்பை மேடாக காட்சி அளித்த பருத்திப்பட்டு ஏரி தற்போது சுற்றுலா தலமாக மாற்றியிருப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஓய்வு நேரத்தில் அமைதியான சூழலில் மனதிற்கு உற்சாகம் ஊட்டும் அளவில் இருப்பதாகவும் எங்கேயும் இல்லாத வகையில் வெளிநாட்டு பறவைகளை இங்கு காண முடிவதாகவும், ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடக்கூடிய இந்த இடத்தில் படகு போக்குவரத்து துவங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர் பெண்கள்.
தண்ணீரின் தூய்மையை பாதுகாக்க தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படுவதாகவும், விரைவில் படகு போக்குவரத்து துவங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி இந்த பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழகத்தில் 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிக்கப்பட்ட பிறகு திறந்து வைத்த முதல் பசுமை பூங்கா, பொதுமக்களின் கனவுகளில் ஒன்றாகும்.