அலேக்காக்க ஆட்டையைப்போட்ட புத்திசாளி திருடன்!

ராயபுரம் சோமு செட்டி ஆறாவது தெருவில் மிஸ்டர் கூல் ஏர் கண்டிஷனர் எனும் ஏசி கடை செயல்பட்டு வருகிறது. விக்னேஷ் என்பவர் நடத்திவரும் இந்த கடையில், பாலாஜி என்பவர் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் கடையில் வேலை செய்து கொண்டிருந்த பாலாஜியிடம் கடைக்கு வந்த மர்ம நபர், தன்னை பிரபல உணவகம் ஒன்றின் பெயரைச் சொல்லி, அதன் மேலாளர் என்று கூறியுள்ளார். தங்களது கடையில் உள்ள 10 ஏ.சி.க்களை சர்வீஸ் செய்ய வேண்டும் என்று கூறியவர், அதற்காக கொட்டேஷன் கேட்டுள்ளார். அப்போது கடை உரிமையாளர் விக்னேஷ் இல்லாததால், உரிமையாளர் வந்ததும் கேட்டுச் சொல்கிறேன் என்று கூறியதால், மர்ம நபர் பாலாஜியின் செல்போன் எண்ணை வாங்கிச் சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து, பாலாஜிக்கு போன் செய்த மர்ம நபர், தான் உணவகத்தில் இருப்பதாகவும் கொட்டோஷனை எடுத்துக் கொண்டு வரும்படியும் கூறியுள்ளார். இதனையடுத்து, அங்கு சென்ற பாலாஜியிடம், கடை உரிமையாளர் விக்னேஷுக்கு போன் செய்து தாருங்கள் என்று மர்ம நபர் கூறியதோடு, பாலாஜியின் போனில் பேசியுள்ளார். அப்போது, அருகே உள்ள கடையில் வொயிட் பேப்பர் வாங்கி வரச் சொல்லியுள்ளார். பாலாஜியும் கடைக்கு சென்று பேப்பர் வாங்கி வந்தபோது, அந்த மர்ம நபர் செல்போனுடன் அங்கிருந்து சென்றுள்ளார். அப்போது தான் தன்னை வரவழைத்து செல்போனை திருடிச் சென்றது பாலாஜிக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியினை ஆய்வு செய்த போலீசார், மர்ம நபர் உணவகத்தில் இருந்து வெளியேறி இருசக்கர வாகனத்தில் சென்றதை கண்டுபிடித்தனர். மர்ம நபருக்கும், அந்த உணவகத்துக்கும் சம்பந்தமில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்த நிலையில், நூதன முறையில் செல்போனை திருடிச்சென்றவரை தேடி வருகின்றனர்.

Exit mobile version