கோவையில் குழந்தைகளை வாங்கி விற்கும் இடைத்தரகர்கள் கைது

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில், பிறந்து 40 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்க முயன்ற இடைத்தரகர்களை, காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே குழந்தைகளை வாங்கி விற்கும் இடைத்தரகர்கள் ஹசீனா, கல்யாணி மற்றும் ஜாகிர் உசேன் என்ற மூன்று நபர்களும் மதுரையைச் சேர்ந்த கண்ணன் மற்றும் ஜோதி தம்பதி இடமிருந்து  பிறந்து 40 நாட்கள் ஆன ஆண் குழந்தையை  இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு  நேற்று மாலை கருமத்தம்பட்டியில் அருகே பிரேமா மருத்துவமனைக்கு வந்து குழந்தையை வாங்கியுள்ளனர்.

இதில்  ஹசீனா மற்றும் கல்யாணி இரண்டு பேரும் குழந்தைகளை வாங்கி விற்கும் இடைத்தரகர்கள். குழந்தையை வாங்கிக்கொண்டு இவர்கள் இருவரையும் ஜாகிர் உசேன் காரில் ஏற்றிக்கொண்டு சூலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது ஹசீனா மற்றும் கல்யாணி இருவருக்கும் குழந்தை விற்று வரும் பணம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பாப்பம்பட்டி பிரிவு அருகே கார் சென்று கொண்டிருக்கும்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் தகராறு  முற்றிப்போக இடைத்தரகர் கல்யாணி காரில் இருந்தபடியே சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்ட அங்கிருந்த காவலர்கள் உடனே காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். பிறகு காவலர்கள் நீங்கள் யார் என்று கேட்டு வாகனத்தை சோதனை போட்டதில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவரும் பதில் அளித்ததால் அவர்கள் மூவரையும்  கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்பு  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இடைத்தரகர்களிடம் நடத்திய விசாரணையில்,  குழந்தையை சட்டத்திற்கு விரோதமாக வாங்கியது தெரியவந்தது.

இதில் இடைத்தரகர் ஹசீனாவுக்கு ஏற்கனவே நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் நிலையத்தில் குழந்தைகள் கடத்தல் தொடர்பான  வழக்கு இருப்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ஹசீனா, கல்யாணி, மற்றும் ஜாகிர் உசேன் ஆகியோரை கைது செய்த  காவல்துறையினர் அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version