அண்ணா திமுக செயற்குழு கூட்டம் – சட்ட திட்ட விதிகளில் திருத்தம்

அண்ணா திமுக செயற்குழு கூட்டம், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதற்காக வருகை புரிந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அண்ணா திமுக செயற்குழு கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 செயற்குழு கூட்டத்தில், கழக சட்ட திட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட்டது. அதன்படி, கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பதிலான, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

 கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அதிமுக சட்ட திட்ட விதி 20-ல் பிரிவு இரண்டு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதி மட்டும் மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல என்று சட்ட திட்ட விதி 43-ம்;

கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியில் மட்டும், விலக்கு அளிப்பதற்கோ, தளர்த்துவதற்கோ அதிகாரம் இல்லை என்று சட்ட திட்ட விதி 45-ம் திருத்தப்பட்டுள்ளது.

 இந்த திருத்தங்கள் இன்றுமுதல் அமலுக்கு வரும் என்றும், இதற்கான ஒப்புதல், பின்னர் கூட்டப்படும் கழக பொதுக்குழுவில் பெறப்படும் என்றும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version