இல்லாத நோய் மீது அச்சம்: மனநிலை பாதிப்பில் சென்னை இளைஞர்கள்…

தலைவலி, அஜீரணம், வியர்த்தல் போன்ற சிறிய நோய் அறிகுறிகளைக் கூட புற்றுநோய், மூளைக் காய்ச்சல் போன்ற பெரிய நோய்களோடு தொடர்புபடுத்தி அச்சப்படுவது மனநிலை ஒருபெரிய பிரச்னையாக சென்னையின் ஐ.டி.துறை இளைஞர்களிடம் பெருகிவருகிறது. இதனால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன? இதற்குத் தீர்வு என்ன? தொகுப்பில் பார்ப்போம்…

தலைவலி, அஜீரணம், வியர்வை போன்றவை ஏற்படும் போது, இணையதளத்தில் உடனே ‘இது என்ன நோயின் அறிகுறி?’ என்று தேடுவதும், கிடைக்கும் பதில்களில் முதல் சில இடங்களில் உள்ள புற்றுநோய், மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களைக் கண்டு அச்சப்படுவதுமான வழக்கம் சென்னையின் ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளைஞர்களில் 55.6% பேரிடம் உள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கணினியில் தேடுவதால் இப்படி இல்லாத நோயை எண்ணி அச்சப்படும் மனநிலை மருத்துவத்தில் ’சைபர் காண்ட்ரியா’ என்று அழைக்கப்படுகிறது. உலகெங்கும் வளர்ந்துவரும் இந்த மனநலப் பிரச்னைக்கு தமிழக ஐ.டி. இளைஞர்கள் இலக்காகி இருப்பது கவலைக்கு உரியதாக உள்ளது.

சென்னையைச் சேர்ந்த 3 டாக்டர்களைக் கொண்ட குழு, 6 ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் பங்குபெற்றவர்களில் 55.6% பேருக்கு சைபர்காண்ட்ரியா பாதிப்பு உள்ளதும், இப்படியாக பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்பதும் ஆய்வின் முடிவுகளில் வெளியாகி உள்ளன.

இப்படியாக நோய் குறித்து தேடுபவர்களில், 38.6% பேர் தங்கள் வேலையையும் மறந்து இணையத்தில் தேடிக் கொண்டு இருப்பதும், 24.4% பேர் தங்கள் பொழுதுபோக்கை விட்டுவிட்டு இணையத்தில் தேடுவதும், 19.5% பேர் எப்போதும் இணையத்தில் நோய் குறித்தே தேடிக் கொண்டு இருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்றவர்களில், 17.6%பேர் ஒரு நோயைக் குறித்து பார்க்கவோ, படிக்கவோ நேரும் போது அது தனக்கும் உள்ளதா என்று உடனே இணையத்தில் தேடுவதாகக் கூறி உள்ளனர். 10.7% பேர் எப்போதும் நோய்கள் குறித்த அச்சத்துடனேயே வாழ்வதாகக் கூறி உள்ளனர். 9.8% பேர் இணையத்தில் காட்டும் நோய் தனக்கு இல்லை என்பதை அறிந்த பின்பும்கூட பயத்தில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.

மேலும் இவர்களில், 16.1% பேர் இணையத்தில் பார்த்த நோய் குறித்து தங்கள் மருத்துவரிடம் பேசுகிறார்கள், 11.7%பேர் இதை அடிக்கடி செய்கிறார்கள். 6.8%பேர் இணையத்தில் பார்ப்பதை நம்புவதும் அளவுக்கு தங்கள் மருத்துவர் சொல்வதை நம்புவது இல்லை என்கின்றன ஆய்வின் முடிவுகள்.

சாதாரண உடல்நலப் பிரச்னைகளைக் கூட பெரிய நோயின் அறிகுறியாகப் பார்க்கும் இந்த மனநிலை ஒருவரின் செயல்திறனை முடக்குவதோடு, அவர்களின் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையும் அழிக்கிறது. இதனால் சைபர்காண்ட்ரியா பெரிய உளவியல் சிக்கலாகப் பார்க்கப்படுகிறது.

சிறிய அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வரும் மனிதர்களை இணையம் பயமுறுத்தக் கூடாது என்று மத்திய அரசு வலியுறுத்தினால் இந்தப் பிரச்னையைக் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இன்னொருபக்கம் சிறிய நோய் அறிகுறிகள் அனைத்தும் பெரிய நோய்களின் அல்ல என்பதை இளைஞர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நோய்கள் மனிதர்களின் உடலைப் பாதிக்கின்றன என்றால், அச்சம் மனிதர்களின் மனதை நோயை விட அதிகமாகப் பாதிக்கின்றது. அதில் இருந்து வெளிவர முயற்சிப்பதே இளைய சமுதாயத்திற்கு நல்லது.

Exit mobile version