பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது வரவேற்பு பேனர்களை வைக்க, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்திற்கு வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். வருகிற 11ஆம் தேதி இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுகின்றனர். சட்ட விரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சென்னை வரும் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை வரவேற்று பேனர்கள் வைக்க அனுமதி கேட்டு மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், 41 இடங்களில் பேனர்கள் வைக்க உள்ளதாகவும், ஒவ்வொரு பேனருக்கும் கீழ் ஒரு நபரை நியமித்து அசம்பாவிதம் ஏற்படாமல் கண்காணிக்க உள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் வாதாடினார். இதை ஏற்று கொண்ட நீதிபதிகள், அரசு இடத்தில் அரசு சார்பில் பேனர் வைக்க அனுமதி கேட்க தேவையில்லை என்றனர். பேனர் வைக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் அரசே முடிவெடுத்து கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.