சென்னையில் நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 46வது புத்தகத் திருவிழாவானது கடந்த ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதனையொட்டி, வாசகர்கள் அதிக அளவில் குவிந்த வண்ணம் உள்ளார்கள். புத்தகத் திருவிழாவின் நுழைவுக் கட்டணமாக பத்து ரூபாய் வசூலிக்கிறார்கள். மக்கள் குடும்பம் குடும்பமாகவும், குழந்தைகளுடன் புத்தகத் திருவிழாவிற்கு வருகை புரிகிறார்கள். பொங்கல் பண்டிகை விடுமுறையினை ஒட்டி அதிக அளவில் வாசகர்கள் அலைமோதினர்.
தங்களுக்கான புத்தகங்களை வாங்குவதோடு மட்டுமல்லாமல், சென்னைப் புத்தகத் திருவிழாவிற்கு வர முடியாத வெளியூர் வாசக நண்பர்களுக்கு சேர்த்தும் புத்தகம் வாங்கிச் செல்கிறார்கள். இப்படி நண்பர்களுக்காக புத்தகம் வாங்கி செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட இலட்சக் கணக்கான புத்தகங்கள் புத்தக கண்காட்யில் உள்ளது. அதிக அளவிற்கான புத்தகங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன என்று தகவல் கூறப்படுகிறது. இதனால் ஸ்டால் போட்ட பதிப்பகத்தார்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து ஒய்.எம்.சி.ஏ வின் அதே மைதானத்தில் சர்வதேச புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.
புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் கூறியதாவது, தமிழ் மொழியின் சிறப்புகளைக் கூறும் புத்தகங்களை வாங்கியுள்ளேன், நான் ஒய்.எம்.சி.ஏவில் முதுகலைப் பயிலும் மாணவன், இந்தப் புத்தகங்களை இந்தியில் மொழிபெயர்க்கப் போகிறேன் என்று அந்த மாணவர் தெரிவித்தார். வாசிப்புப் பழக்கம் மனித வாழ்க்கையில் முக்கியமானதொரு அங்கமாகும். அதுவும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நமது தமிழ் மொழியை தேடி வாசிப்பது என்பது வியப்புக்குரியது. இது நம் மொழியில் தனிச்சிறப்பினைக் காட்டுகிறது.