செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் தரம் பிரிக்கப்படாமல் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அச்சம் நிலவுகிறது.
மருத்துவமனைகளில் சேரும் மருத்துவக் கழிவுகளை அதன் தன்மைக்கேற்ப தரம்பிரித்து, மஞ்சள், சிவப்பு, கருப்பு, நீல நிற பைகளில் வைத்து 24 மணி நேரத்திற்குள் சுத்திகரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஆனால், இது எதையுமே பின்பற்றாமல் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குப்பைமேடு போல மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் இருப்பதாக, மருத்துவமனைக்கு வருபவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அங்கு வரும் தெருநாய்கள் மற்றும் கால்நடைகள் இந்த குப்பை மேட்டில் மேய்வதால், அவற்றுக்கு நோய் பரவுவதுடன், அதன் மூலம் மக்களுக்கும் தொற்று ஏற்படும் அவலம் நிலவுகிறது.
மருத்துவமனை டீன் முதல் மருத்துவக் கழிவுகளை அகற்ற டெண்டர் எடுப்பவர்கள் வரை, அனைவரும் அலட்சியப் போக்கோடு நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா தடுப்பூசியை செங்கல்பட்டில் தயாரிக்க அனுமதி கேட்டு, மத்திய அரசிடம் நாடகம் நடத்திய திமுக, அதே செங்கல்பட்டு மருத்துவமனையில் சுகாதார சீர்கேட்டை கூட சரிசெய்ய முடியாமல், திணறிக் கொண்டிருப்பது திமுகவின் நிர்வாகத் திறமையின்மையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.