இரு சக்கர வாகனத்தில் சென்று பெட்ரோல் நிரப்பும் போது, பங்க் ஊழியர்கள் சரியான அளவில் பெட்ரோல் நிரப்புகின்றனரா என்ற சந்தேகம் எழுவது இயல்பான ஒன்று தான்.
பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அளவில் மோசடி செய்வதாக வரும் செய்திகளே இதற்கு காரணம்.
கார் போன்ற பெரிய வாகனங்களுக்கு டீசல் நிரப்பும் போதும் இதே சந்தேகம் எழுகிறது.
மோசடிகளை தடுக்க தமிழக தொழிலாளர் நலத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாதத்திற்கு 2 முறை ஆய்வும், புகார்கள் பெறப்படும் பட்சத்தில் அதிரடி சிறப்பு சோதனையும் நடைபெறுகிறது.
இந்நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் தமிழகம் முழுவதும் சுமார் 127 பெட்ரோல், டீசல் நிலையங்கள் அளவில் மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தொழிலாளர் துறை, நுகர்வோருக்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் பெட்ரோல் நிலையங்களில் உள்ள 5 லிட்டர் கூம்பு வடிவ அளவின் மூலம் பெட்ரோல் அளவை சரிபார்த்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இது நுகர்வோர் பலருக்கும் தெரிவதில்லை. மோசடியை தடுக்க இது நல்ல வழி. இதனை நுகர்வோர் பயன்படுத்த வேண்டும்.
இது தவிர மோசடிகள் குறித்து புகார் அளிக்க TN-LMCTS என்ற மொபைல் ஆப் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆப்பில் மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் பற்றி தகவல்களை பதிவேற்றம் செய்தால், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.