சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு என்ற வாசகம் இனி ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், பாமர மக்கள், முதியோர் அவதியடைந்துள்ளனர். சென்னையின் அடையாளங்களில் ஒன்றான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுமார் 150 ஆண்டுகள் பழமையானது. இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு 300க்கும் அதிகமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக புறப்படும் மற்றும் வருகை தரும் ரயில்களின் எண், சேரும் இடம், புறப்படும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற தகவல்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் “சென்ட்ரல் ரயில் நிலையம் அமைதியான ரயில் நிலையமாக மாறுவதால் இனி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படாது என்றும், அதற்கு பதிலாக, ரயில்கள் புறப்பாடு, வருகை, ரயில் எண், நடைமேடை போன்ற விவரங்கள் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.அதன்படி 24 மணி நேரமும் எப்போதும் ஒலித்து கொண்டே இருக்கும் ஒலிபெருக்கி பெட்டிகள் தற்போது அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றன. இதனால் எப்போதும் அறிவிப்பு சப்தத்துடன் காணப்படும் சென்ட்ரல் ரயில் நிலையில் தற்போது அமைதியான ரயில் நிலையமாக மாறியுள்ளது.கால சூழ்நிலைக்கு ஏற்பட டிஜிட்டல் முறைக்கு மாறினாலும், இதற்கு முன்பு கடைசி நேரத்தில் பயணிகள் ரயில் நிலையம் வந்தாலும், ஒலிபெருக்கி அறிவிப்பை பின்பற்றி நடைமேடைக்கு சென்றுவிடுவர். ஆனால், தற்போது டிவியை பார்த்து நடைமேடைக்கு செல்ல தாமதம் ஏற்படலாம். இதேபோல் படிக்காத பாமர மக்கள், முதியோர், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இந்த புதிய நடைமுறை, சிக்கலை ஏற்படுத்தும் என்பதே உண்மை.