பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஒப்பந்தங்கள் வழங்கியதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டதாக கூறினார்.
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது நான்கு வழிச் சாலைத் திட்டம் உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகளுக்கு 70 சதவீதம் வரை கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். ஆற்காடு, விழுப்புரம், போளூர், சிதம்பரம், திருக்கோவிலூர் நெடுஞ்சாலைப் பணிகளின்போது, ரூ.611 கோடிக்கு ஒப்பந்தம் கோரிய தி.மு.க. அரசு, பின்னர் 165 கோடியை கூடுதலாக ஒதுக்கீடு செய்ததாக அவர் தெரிவித்தார்.
அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வரும் ஒப்பந்தப் பணிகளில் முறைகேடுகளுக்கு வாய்ப்பே இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். கள்ளக்குறிச்சி தனி மாவட்டக் கோரிக்கை தொடர்பாக, கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்தார்.