சாதியும் , திமுக அரசியலும் சேர்ந்து பெண்ணைத் தாக்கி அரை நிர்வாணத்துடன் ஓட வைத்த அவலம்!

பெரியாரின் 143வது பிறந்தநாள் கொண்டாடும் இந்த வேளையிலும் வாணியம்பாடி அருகே சாதியும் அரசியலும் , திமுக அரசியலும் சேர்ந்து பெண்ணைத் தாக்கி அரை நிர்வாணத்துடன் ஓட வைத்த அவலத்தை காவல்துறையும் கண்டு கொள்ளாத சோகம் அரங்கேறியுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம் பங்கூர் தாதகவுண்டனூரில் வசித்து வருபவர் சித்ரா. இவரது பெற்றோர் கிருஷ்ணன் – சுசிலா ஆகியோர் கலப்பு திருமணம் செய்தவர்கள். இந்த காரணத்தால் இவர்களின் குடும்பத்தினரை, தீண்டாமை எனும் தீ இன்றும் சுட்டெரித்து வருகிறது.

தந்தை கிருஷ்ணனின் உறவினர்களான திமுக முன்னாள் கவுன்சிலர் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் 10 பேர், சித்ராவின் குடும்பத்தினரை அடிக்கடி சாதியின் பெயரை சொல்லி திட்டுவதுடன், மிரட்டல் விடுப்பதாவும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் சித்ராவின் வீட்டிற்கு சென்ற திமுக பிரமுகர் சரவணனின் உறவினர்கள் கத்தி, கடப்பாரை கொண்டு கொலை செய்ய முயன்றதாக,வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் ஆலங்காயம் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார்.

போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்தவர்கள், கடந்த 8ஆம் தேதி, சித்ராவை சரமாரியாக தாக்கி அரைநிர்வாணமாக ஓட விட்ட கொடூரமும் அரங்கேறியுள்ளது. இதனை செல்போனில் படம் பிடித்ததால், அவரது தங்கையும் தாக்கப்பட்டார். அவரது கழுத்திலிருந்த தங்க சங்கிலியும் பறிக்கப்பட்டது.

படுகாயமைடைந்த சித்ராவுக்கு மருத்துவமனையிலும் சாதி பாகுபாடு காட்டி தரையில் படுக்க வைத்ததாகவம், சாதிரீதியான பிரச்னையை நிலப்பிரச்சினையாக திசை திருப்ப முயற்சிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹாவிடம் சித்ரா மனு அளித்துள்ளார். மனு மீது வாணியம்பாடி டி.எஸ்.பி விசாரணை மேற்கொள்வார் என அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக சித்ரா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

55ஆண்டுகளாக சாதி பாகுபாட்டால் இன்னல்களுக்கு ஆளாகி வரும் சித்ராவுக்கு, தற்போதாவது விமோசனம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version