நெல்லையில் முன்னாள் திமுக மேயர் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 23ஆம் தேதி நெல்லையில் முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் அவரது வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய 3 பேரும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த கொலை சம்பவத்தில் திமுகவின் உட்கட்சி மோதல் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனை நிரூபணம் செய்யும் வகையில், திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் மாநில துணைச் செயலாளர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து கார்த்திகேயனை கைது செய்த சிபிசிஐடி போலீசார், கொலை நடந்த இடத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.