சென்னை வில்லிவாக்கத்தில் முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் கார் ஓட்டுநர் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை வில்லிவாக்கம் பலராமபுரம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். கார் ஓட்டுனரான இவர், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் பணி முடித்து விட்டு, சிந்தாமணி கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல், பாஸ்கர் முகத்தில் ஸ்பேரே அடித்து அவரை நிலைகுலைய செய்தது. பின்னர் சினிமா பட பானியில் 5 பேரும் அவரை சராமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் முகம், தலை மற்றும் கைகளில் பலத்த காயமுற்ற பாஸ்கர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த வில்லிவாக்கம் காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், நடந்தப்பட்ட விசாரணையில் கடந்த ஆண்டு ரயில்வே தொழிற்சங்க தலைவர் புதியவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக இருந்தவர், பாஸ்கரன் என்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் சிறை சென்ற பாஸ்கரன், 6 மாதங்களுக்கு முன்பு குண்டாஸ் வழக்கில் கைதாகி சிறை சென்று வந்துள்ளார்.
பழிக்கு பழி வாங்க, புதியவனின் மைத்துனர் சுபாஷ் இந்த கொலை திட்டத்தை தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 5 பேருடன் முகத்தில் துணியை கட்டி கொண்டு பாஸ்கரை வழிமறித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்விரோதம் காரணமாக நடந்த இந்த சினிமா பட பாணி கொலை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.