சமூக வலைத் தளங்களில் உலக அளவில் இப்போது ‘பாட்டில் மூடி’ சேலஞ்ச் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் எல்லாம் தங்கள் ‘பாட்டில் மூடி’ சேலஞ்ச் வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றி வருகின்றனர், அவர்களின் ரசிகர்களும் இதை முயற்சித்து வருகின்றனர். அது என்ன பாட்டில் மூடி சேலஞ்ச்? – பார்ப்போம் இந்த செய்தித் தொகுப்பில்…
சமூகவலைத்தளவாசிகளின் உலகம் தனிப்பட்டது. அதில் சர்வதேச அளவில் சில சவால்கள் அவ்வப்போது வந்து வைரலாவது உண்டு. முன்னர் ஐஸ் பக்கெட் சாலஞ்ச் என்ற ஒன்று வைரலான போது பில்கேட்ஸ் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் தங்கள் தலையில் தாங்களே ஒரு வாளி பனிக்கட்டியைக் கொட்டிக் கொண்டது உங்களுக்கு நினைவு இருக்கலாம். அதன் பின்னர் பிட்னஸ் சாலஞ்ச் வந்த போது அதற்காக பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டது இந்தியாவிலும் இந்த சவால்களைப் பிரபலப்படுத்தியது.
இது போல கிகி சாலஞ்ச், நில்லு நில்லு சாலஞ்ச் – போன்ற சில வேண்டாத சவால்களும் வைரலாகி மக்களைப் பாடாய்ப்படுத்தியது தனிக்கதை. இந்த தொடர் சாலஞ்சுகளின் வரிசையில் இப்போது புதிதாக வந்து இணைந்திருக்கிறது ‘பாட்டில் மூடி சேலஞ்ச்’. இதன் பின்னே உள்ள கதை சுவாரசியமானது.
கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த டேக்வாண்டோ தற்காப்புக்கலை வீரரான பராபி டாவ்லட்சின் எப்பவர் கடந்த வாரம் இண்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ஒரு பாட்டிலின் மூடியை பேக் கிக் முறையில், வலது காலால் உடைத்து ஒருமுறையும், இடது காலால் உதைத்து ஒருமுறையும் அவர் திறந்தார். அந்த வீடியோவோடு, ‘இந்த சவாலை வேறு யாராவது செய்ய முடியுமா?’ – என்றும் அவர் கேட்க, அதன் தொடர்ச்சியாக இப்போது பாட்டில் மூடி சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் கொடிகட்டிப் பறக்கிறது.
முந்தைய சாலஞ்ச்களைப் போல இது எளிதாக இல்லை என்பதால், வெகு சிலரே சேலஞ்சில் வென்ற வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஸ்டேதம், அமெரிக்கா பாப் பாடகர் ஜான் மேயர், ஹாலிவுட் நடிகை வொயிட்னி கம்மிங்ஸ் – உள்ளிட்டோரின் வெற்றிகர வீடியோக்கள் அவர்களின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அதே சமயம் இந்த சவாலில் ஈடுபட முயன்று பாட்டிலை மொத்தமாகப் பறக்க விட்டவர்கள், விழுந்து காலிலும் கைகளிலும் அடிபட்டவர்களும் தங்கள் சோக வீடியோக்களை இன்னொரு பக்கம் பதிவேற்றி வருகின்றனர்.
மனித வாழ்க்கையில் சாதிக்க மகத்தான சவால்கள் பல இருக்க, சமூக வலைத்தளங்களில் உள்ள சவால்களுக்காக காயம் பட்டுக் கொள்ள வேண்டாம் – என்பதே வைரல் சாலஞ்சுகள் குறித்து மனநல ஆலோசகர்கள் மக்களுக்குக் கூறும் அறிவுரையாக உள்ளது.
Jason Statham bottle cap challenge. ?
pic.twitter.com/EHFAWchOFU— Clayton Baker? (@IGIF_) July 2, 2019
5 takes later and a broken bottle of olive oil…passing this challenge on to Coach @heidimoneymaker and Chef @adam.p.lang @ufc @BlessedMMA pic.twitter.com/0dZ6ZXrYNb
— James Moontasri (@jmoontasri) July 1, 2019