கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் காணாமல் போன நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டாரா..? என்ற சந்தேகத்தில் ஆற்றில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
கர்நாடக முன்னாள் முதலமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி. சித்தார்தா, கஃபே காபி டே நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். அசுர வளர்ச்சி அடைந்த சித்தார்தா, நாடு முழுவதும் பல இடங்களில் கஃபே காபி டே கிளைகளை நிறுவினார். தொழிலில் திடீரென ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
மைன்ட் ட்ரி நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகளை சித்தார்தா அண்மையில் விற்றுள்ளார். நஷ்டம் காரணமாக கஃபே காபி டே நிறுவனத்தை விற்க கோகோ கோலா நிறுவனத்திடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், தொழில் நிமிர்த்தமாக சிக்மங்களூர் சென்ற வி.ஜி.சித்தார்தா காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது, உல்லால் பாலத்தில் காரை நிறுத்த சொல்லி நடந்து சென்ற அவர் திடீரென காணாமல் போனார்.
கார் ஓட்டுனர் கொடுத்த தகவலின் பேரில், சித்தார்தாவை தேடி வந்த நிலையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கஃபே காபி டே நிறுவன உரிமையாளர் வி.ஜி.சித்தார்தா தனது ஊழியர்களுக்கு கடைசியாக எழுதிய கடிதம் தற்போது காவல்துறைக்கு கிடைத்துள்ளது. அதில், தொழிலதிபராக தான் தோல்வி அடைந்து விட்டதாகவும், வணிகத்தை சரியான முறையில் கொண்டு செல்ல தவறிவிட்டதாகவும் சித்தார்தா குறிப்பிட்டுள்ளார்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதற்கு முழுக்க முழுக்க தான் மட்டுமே பொறுப்பு என்றும், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுப்பதாகவும் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தின் மூலம் பண நெருக்கடியில் சித்தார்தா சிக்கி தவித்தது உறுதியாகி உள்ளது.
சித்தார்தா தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படும் நேத்ராவதி ஆற்றில் தேடுதல் பணிக்காக ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவல் படையின் உதவியை நாடி உள்ளனர்.