கஃபே காபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா சடலம் கண்டெடுப்பு

கஃபே காபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல், 36 மணி நேர தேடுதலுக்கு பிறகு நேத்ராவதி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கர்நாடக முன்னாள் முதலமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி. சித்தார்த்தா, கஃபே காபி டே நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். தொழிலில் அசுர வளர்ச்சி அடைந்த சித்தார்த்தா, நாடு முழுவதும் பல இடங்களில் கஃபே காபி டே கிளைகளை நிறுவினார். தொழிலில் திடீரென ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருந்த சித்தார்த்தா, மைன்ட் ட்ரி நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகளை அண்மையில் விற்றுள்ளார்.

நஷ்டம் காரணமாக தான் தொடங்கி நடத்தி வந்த கஃபே காபி டே நிறுவனத்தை விற்க கோகோகோலா நிறுவனத்திடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். வருமானத்தை குறைத்து காட்டியதாக சித்தார்த்தா மீது வருமான வரித்துறை குற்றம்சாட்டியது. ஊழியர்களுக்கு கடைசியாக எழுதிய கடிதத்திலும், கடன் நெருக்கடியில் சிக்கி தவித்ததை சித்தார்த்தா குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில், திங்கட்கிழமை மாலை தொழில் நிமித்தமாக சிக்மங்களூர் சென்ற சித்தார்த்தா காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது, உல்லால் பாலத்தில் காரை நிறுத்த சொல்லி நடந்து சென்ற அவர் திடீரென காணாமல் போனார். கார் ஓட்டுனர் கொடுத்த தகவலின் பேரில், சித்தார்த்தாவை தேடி வந்தனர்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் நேற்று காலை முதல் தேடுதல் பணி நடைபெற்றது. 36 மணி நேர தேடுதலுக்கு பிறகு சித்தார்த்தாவின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

Exit mobile version