புத்தம் சரணம் கச்சாமி..! உலகெங்கிலும் கொண்டாடும் புத்த பூர்ணிமா!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.அதன்படி இந்த ஆண்டு புத்த பூர்ணிமா இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

“புத்தன்” என்ற சொல்லுக்கு “விழித்தெழுந்தவன்”, “ஒளியினைக் கண்டவன்” என்று பொருள். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர் புத்தர் . உலகம் முழுவதும் பௌத்த மதத்தைப் பின்பற்றும் பௌத்தர்கள் இந்த புத்த பூர்ணிமா தினத்தில், புத்தரை வழிபாடு செய்து வேண்டிக் கொள்கின்றனர். புத்தர் கோயிலுக்குச் சென்று வேண்டுதல் செய்பவர்கள் மற்றவர்களுக்குப் பல பொருட்களைத் தானமாக வழங்குகின்றனர். விரதம் இருந்து தியானம் செய்து புத்தரை வழிபடுகின்றனர். அரசரின் புதல்வனாக அவதரித்து மக்களின் நல்வாழ்விற்காக அனைத்தையும் துறந்த மகான் புத்தர் பிரான். இவர் அவதரித்த நாள் புத்த பூர்ணிமா, புத்த ஜெயந்தி அல்லது விசாக் என்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் புத்தரின் பிறந்த தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கௌதம புத்தரின் பிறந்த நாள் உறுதியாகத் தெரியவில்லை. புத்த பூர்ணிமா என்பது புத்தருக்கு ஞானம் கிடைத்த நாள் என்றும் நம்பப்படுகிறது. புத்தரின் பிறப்பும், இறப்பும் இந்த நாளில் நிகழ்ந்தாக கருதப்படுகிறது. புத்தர் அவதரித்த தினமும் ஞானம் கிடைத்த நாளும் புத்த பூர்ணிமா திருநாளாக கூறப்படுகிறது. தற்போது இந்த பண்டிகை புத்தரின் 2585ஆவது பிறந்த நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் துணைக்கண்டத்தில் சிக்கிம், லடாக், அருணாசலப் பிரதேசம், கலிம்பாங், டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நாள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் புத்த பூர்ணிமா பௌத்தர்களின் கொண்டாட்டமாக அமைகிறது. தியானம் என்பது மன அமைதியை கொடுத்து நமது வாழ்வை செம்மை படுத்தும் என்று நம்புகின்றனர் பௌத்தர்கள். அது மட்டுமல்லாமல் நம் லட்சியங்களை அடைய தியானத்தின் மூலம் சிந்தனையை ஒருமுகப்படுத்தி தியானம் செய்வதனால், நம் லட்சியத்தை அடைய முடியும் என்றும் கூறுகின்றனர்.

பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்குப் பீகார் மாநிலத்தில் உள்ள கயா, வழிபாடு செய்ய முக்கிய ஸ்தலமாக உள்ளது. இந்த புத்த கயா என்னும் இடத்தில் தான் புத்தருக்கு ஞானம் கிடைத்ததாகவும் இன்றுவரை நம்பப்படுகிறது. கயா, மட்டுமல்லாமல் உலகளவில் வேறு பல இடங்களிலும் பிரசித்தி பெற்ற புத்தர் கோயில்கள் உள்ளன. புத்தரின் பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாம் இந்த புத்த பூர்ணிமாவில் நிகழ்ந்ததாகப் பௌத்தர்கள் அனைவரும் நம்புகின்றனர். அதனால் இந்த நாள் மிகவும் சிறப்புப் பெற்ற நாளாக அவர்களால் கொண்டாடப்படுகிறது.

– ராஜா சத்யநாராயணன். செய்தியாளர்.

 

Exit mobile version