பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனத்திற்கு பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு 1 கோடியே 78 லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக கலாநிதிமாறன், தயாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்த நிலையில் இதை எதிர்த்து சிபிஐ மேல் முறையீடு செய்தது. அதனையடுத்து இந்த வழக்கு விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட கலாநிதிமாறன், தயாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர். தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.