சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புதிதாக திறக்கப்பட்ட மார்பக புற்றுநோய் மையத்தில் புற்றுநோய் வருவதற்கான அறிகுறி உள்ளதா என்பதை 15 நிமிடங்களில் கண்டறிந்து கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மார்பக பரிசோதனை மையத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சரோஜா, நிலோபர் கபில் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மார்பக புற்றுநோய் மையத்தில் நவீன கருவிகள் மூலம் மார்பக புற்றுநோய் வருவதற்கான அறிகுறி உள்ளதா என்பதை 15 நிமிடங்களில் கண்டறிந்து கொள்ளலாம் என்று கூறினார்.
30 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் ஏற்படுவதாக கூறிய அமைச்சர், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலேயே இந்த அதிநவீன சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்