பொதுவாக, வெள்ளை நிற தோலை உடையவர்களே உலக அழகிப் பட்டம் வெல்கிறார்கள் என பலரும் எண்ணுகின்றனர். அந்த எண்ணத்தை சுக்கு நூறாக்கி, கருப்பின பெண்கள் அழகிப் போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர்.
உலக அழகி போட்டிகளில், ஏற்பாட்டாளர்கள் இன பாகுபாடு உணர்வுடன் அழகிகளை தேர்வு செய்கின்றனர் என்ற கருத்து சமீப காலமாக இருந்து வருகிறது. இதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக, இந்த ஆண்டு 5 கருப்பின அழகிகள் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், 2019 ஆம் ஆண்டிற்கான மிஸ் வேர்ல்டு பட்டத்தை, ஜமைக்காவின் டோனி ஆன் சிங் என்ற 23 வயதான பெண் வென்றார். பிரான்ஸ் மற்றும் இந்தியாவின் அழகிப் போட்டியாளர்களை அவர் வீழ்த்தி, முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமைக்காவில், பொதுவாக கருப்பின பெண்கள் மட்டுமே அதிக அளவில் காணப்படுகின்றனர். அவர்கள் வெளி உலகிற்கு வரவேண்டும், தங்களைப் பற்றி தாழ்வு நிலை கருதாமல், இலக்கினை நோக்கி பயணித்து, அதனை அடைய வேண்டும். அதற்கான முதல் கட்ட ஊக்குவிப்பாகவே நான் இறங்கியுள்ளேன் என, ஜமைக்கா அழகி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜோஜிபினி ட்டுன்ஜி, மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். இந்தத் துறையில் அழகு என்பதற்கான வரையறைகளை வெளிப்படையாக விமர்சித்தவர் அவர். இயற்கையான தனது தலைமுடியுடன் போட்டியில் பங்கேற்று அவர் வெற்றி பெற்றார். ”என்னைப் போன்ற தோற்றம், என்னைப் போன்ற தோல் மற்றும் தலைமுடி உள்ள பெண்கள், ஒருபோதும் அழகானவர்களாக மதிக்கப்படாத உலகில், நான் வளர்ந்திருக்கிறேன்” என்று வெற்றிக்குப் பிறகு அவர் கூறியுள்ளார்.
செப்டம்பரில் மிஸ் அமெரிக்காவாக, நியா பிராங்கிளின் தேர்வு செய்யப்பட்டார். மிஸ் டீன் யு.எஸ்.ஏ.வாக கலியக் கேரிஸ் மற்றும் மிஸ் யு.எஸ்.ஏ.வாக செஸ்லி க்ரிஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.
1940கள் வரையில், வெள்ளையர் இனம் அல்லாதவர்கள், மிஸ் அமெரிக்கா போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் விதிகள் மாற்றப்பட்ட போதிலும், 1970 வரையில், கறுப்பர் இன பெண்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. தற்போது அவை அனைத்தும் மாறியுள்ளன.
இது குறித்து அமெரிக்க சிவில் உரிமைகள் வழக்கறிஞர் கிரிஸ்டன் கிளார்க் கூறுகையில், பெண்கள் அழகுக்காக மட்டும் தேர்வு செய்யப்படுவதில்லை… சமூகத்துக்கு அர்த்தம் உள்ள பங்களிப்பு செய்யும் தன்மையின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்கிறார். அந்த விதத்தில், தற்போது 5 அழகிகள் இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தடைகளை எல்லாம் தகர்த்து, இனம், நிறம் முக்கியம் இல்லை, திறமைக்கே அழகி பட்டம் என கருப்பின பெண்கள் நிரூபித்து வருவது, மிகவும் பாரட்டுக்குரியதே.