கோட்சே விவகாரம்: பாதுகாப்புத்துறை ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா நீக்கம்

நாதுராம் கோட்சேயைத் தேசபக்தர் எனப் பேசிய பிரக்யா தாக்கூரைப் பாதுகாப்புத் துறைக்கான ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்கவுள்ளதாக பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் போபால் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் பிரக்யா தாக்கூர். இவர் நேற்று மக்களவையில் பேசியபோது காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயைத் தேசபக்தர் எனக் கூறினார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் பேசிய பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பிரக்யா தாக்கூரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தார். இதுபோன்ற பேச்சுக்களை பாஜக ஆதரிக்காது எனவும் தெரிவித்தார். பாதுகாப்புத் துறைக்கான ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்க உள்ளதாகவும், கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பிரக்யாவைப் பங்கேற்க அனுமதிக்கப்போவதில்லை எனவும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

Exit mobile version