உணவு தேடி தமிழகத்தில் பறவைகள் அலையும் அவலம் !

தமிழகத்தில் பறவைகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை வனத்துறை
தொடங்கியுள்ளது. சென்னையில் பள்ளிக்கரணை, செங்கல்பட்டிடு, வேடந்தாங்கல் என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ஆனால், அண்மைக்காலமாக இயற்கை பேரிடர் சமயங்களில் அதிக அளவில் மரங்கள் சாய்வதும், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்களை வெட்டப்படுவதும் அதிகரித்து உள்ளதால் பறவைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைவதோடு, இருக்கும் பறவைகளும் உணவு தேடி அலைவதாக ஆதங்கம் தெரிவிக்கின்றனர் பறவை ஆர்வலர்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவாக கடந்த சில மாதங்களாக உணவு தேடி அலையும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக கூறுகிறார் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு உணவளித்து வரும் புருஷோத்தமன். கடந்த 12 ஆண்டுகளாக சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பறவைகள் வரை காலை மாலை என இரு வேளையும் உணவருந்தி வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்கிறார் புருஷோத்தமன்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் மரங்களை முறையாக பராமரிப்பதில்லை என்றும், மரங்கள் வளர்ப்பில் பலரிடமும் ஆர்வம் குறைந்து விட்டதாகவும் வேதனை தெரிவிக்கும் புருஷோத்தமன், மரங்கள் குறைந்ததால், அண்மைக்காலமாக சிட்டுக்குருவி, மைனா, வவ்வால், கழுகு போன்ற பறவைகளை காண்பதே அரிதாகி விட்டதாகவும் அதிர்ச்சி தெரிவிக்கிறார்.

பறவைகளுக்கான தங்குமிடங்களும், உணவும் மரங்கள் தான். மரங்கள் குறைந்து வருவதால் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. பறவைகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் முன்பாக மரங்களின் எண்ணிக்கையை அரசு கணக்கெடுக்க வேண்டும் என்பதும் பறவை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
மரங்கள் வளர்ப்பது என்பது பறவைகளுக்கு மட்டுமல்ல மனிதர்களின் சந்ததி ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றனர். இயற்கையின் சமநிலையைக் காக்க மரம் வளர்ப்போம் பறவைகளை பாதுகாப்போம்.

Exit mobile version