படுக்கையில் முடங்கிய நோயாளிகளுக்கு பயோ மெட்ரிக் டாய்லெட் பெட் கண்டுபிடித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சரவணமுத்து தேசிய அளவில் குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றுள்ளார்.
படுக்கையில் முடங்கிய நோயாளிகளை கவனித்துக் கொள்வது சர்வதேச அளவில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில், யாருடைய உதவியும் இல்லாமல் இவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்கும் வகையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் தளவாய்புரத்தை சேர்ந்த சரவணமுத்து என்பவர் பயோ மெட்ரிக் டாய்லெட் பெட்டை கண்டுபிடித்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும்நிலை ஏற்பட்ட தனது மனைவிக்காக இந்த படுக்கையை சரவணமுத்து உருவாக்கியுள்ளார்.
சென்னையை சேர்ந்த குருமூர்த்தி என்பவரின் உதவியால் இந்த பயோ மெட்ரிக் டாய்லெட் படுக்கையை முழுமையாக உருவாக்கி உள்ளார். இந்த கண்டுபிடிப்பிற்கு பலகட்ட சோதனைக்கு பிறகு இந்திய ஆராய்ச்சி மையம் அங்கீகாரம் வழங்கி பாராட்டியுள்ளது. மேலும் இவரின் கண்டுபிடிப்புக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
படுத்த படுக்கையாக உள்ளவர்கள், பயோ மெட்ரிக் படுக்கையில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால், படுக்கையின் நடுப்பகுதியில் டாய்லெட் கோப்பை வரும். இயற்கை உபாதையை கழித்தவுடன் மற்றொரு பட்டனை அழுத்தினால் தண்ணீர் விட்டு சுத்தமாகும் வகையில் இந்த படுக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
பேட்டரி மூலம் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படுக்கையை யாருடைய உதவியும் இல்லாமல் நோயாளியே இயக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த படுக்கையை தயாரிக்க 61 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று சரவணமுத்து கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் பார்த்து, இந்த படுக்கையை உருவாக்கித் தர இதுவரை தமிழகத்தில் மட்டும் 675 பேர் ஆர்டர் கொடுத்துள்ளதாக கூறும் சரவணமுத்து, தமிழக அரசு உதவி செய்தால், இதை மிகப்பெரிய அளவில் கொண்டுசெல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
எரிபொருளே இல்லாமல் ஓடும் காரை கண்டுபிடிப்பதே தனது வாழ்வின் லட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் 3 கோடி பேர் படுக்கை நோயாளிகளாக உள்ளதாக புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. இந்த நோயாளிகளின் வசதிக்காக பயோ மெட்ரிக் டாய்லெட் படுக்கையை பெரிய அளவில் செய்ய தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் நோயாளிகளின் வாழ்க்கையில் ஒளியேற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.