தமிழ்நாட்டில் போரூர் அரசு பள்ளியில் பயோமெட்ரிக் முறை அறிமுகம்  

பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை உடனடியாக பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகள், விவசாயிகளுக்கு பயிர்க் கடன், கறவை மாட்டுக் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், பயனாளிகளுக்கு கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் போரூர் அரசு பள்ளியில் பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் இது அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு காலணி வழங்குவதற்குப் பதிலாக ஷூ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,1 முதல் 8 ம் வகுப்புவரையிலும் நான்கு சீருடைகளை அரசே வழங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

சிறப்பாசிரியர்கள் இரண்டு நாட்களில் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவட்ட கூட்டுறவு வங்கி முதன்மை அலுவலர் அழகிரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version