தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, விடிய விடிய பழைய பொருட்களுக்கு தீயிட்டுக் கொளுத்தி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பழையன கழிதலும்… புதியன புகுதலும்… என்பதற்கேற்ப, மார்கழி கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படும். இந்நாளில் வீட்டில் உள்ள உபயோகமற்ற பழைய பொருள்களை தீயிட்டுக் கொளுத்தி, மறுநாள் பிறக்கப்போகும் தை முதல் நாளை, புதிய பொருள்களுடன் வரவேற்கும் நோக்கத்தில், போகியை மக்கள் கொண்டாடுகின்றனர்.
இந்தப் பண்டிகையை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகாலையில் உற்சாகத்துடன் கொண்டாடினர். அதே நேரத்தில், தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, மாசு இல்லாத போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்ததால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருள்களை தீயில் எரிப்பதை பொதுமக்கள் தவிர்த்தனர்.