உலகில் இதுவரை எத்தனையோ பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. அதில் முக்கிய கொள்ளை சம்பவமாக கருதப்படுவது லிபியாவில் நடைபெற்ற பெங்காஸி பொக்கிஷ கொள்ளை. இன்று வரை அந்த பொக்கிஷங்களை உலக நாடுகள் பலவும் தேடி வருகின்றன.
வட ஆப்பிரிக்க நாடான லிபியா ஒரு காலத்தில் கிரேக்கப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. கி.பி. 1910 முதல் 1947 வரை இத்தாலியின் காலனியாகவும் இருந்தது. அப்போது இத்தாலிய ஆய்வாளர்கள் லிபியாவின் பல இடங்களில் தொல்பொருள் ஆய்வை மேற்கொண்டனர். பல்வேறு கிரேக்கப் பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் அலெக்சாண்டர் காலத்து நாணயங்களும், கலைப்பொருட்களும் உண்டு.
சைரெனைகா லிபியாவின் பழமையான கடற்கரை நகரம். அது கிரேக்க ராஜ்யத்தின் ஆளுகையில் இருந்தபோது, அங்கே கிரேக்கக் கடவுளான ஆர்தேமிஸுக்குக் கோயில் எழுப்பப்பட்டது. அதே கோயிலில் அகழ்வாய்வை மேற்கொண்டபோது கி.மு. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டில் உள்ள பல பொருட்கள் கண்டுபிடிக்கபட்டன.
அப்போது பல்வேறு கிரேக்கப் பொக்கிஷங்கள் கிடைத்தன. அது மட்டும் அல்லாது சுமார் 2000-க்கும் மேற்பட்ட பழங்கால நாணயங்களைச் சேகரித்தனர். இவை அனைத்துமே இத்தாலிய தொல்லியல் ஆய்வாளர்கள் பொறுப்பிலேயே இருந்தன.
இரண்டாம் உலகப்போர் நேரம். ஹிட்லருக்கு ஆதரவாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த இத்தாலி, 1942-ல் தன் பலத்தை இழந்தது. அதனால் தன் வசம் இருந்த கிரேக்கப் பொக்கிஷங்கள் அனைத்தையும் பத்திரமாக வட இத்தாலிய நகரமான கிரெமோனாவுக்கு அனுப்பி வைத்தது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் பத்திரமாக ரோமுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
லிபியாவின் விடுதலைக்குப் பிறகு, அங்கே அரசராகப் பொறுப்பேற்றவர் முதலாம் இத்ரிஸ். அவர் பொக்கிஷங்களை எல்லாம் கி.பி. 1961-ல் லிபியாவின் பெங்காஸி நகரத்துக்கு அனுப்பி வைத்தார்.
பெங்காஸி பொக்கிஷங்களில் எந்த மாதிரியான பொருட்கள் இருக்கின்றன என்ற முறையான ஆவணப்பதிவு ஏதும் இல்லை. சில நாணயங்கள், சில கலைப்பொருட்கள் மட்டும் ஒளிப்படங்களாகப் பதிவு செய்யப்பட்டன. பின்பு அவை தேசிய வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டன. 1969-ல் லிபியாவில் ராணுவப் புரட்சி அரங்கேறியது. முகம்மது கடாஃபி லிபியாவின் சர்வாதிகாரி ஆனார். அவரது ஆட்சி 2011-ல் முடிவுக்கு வந்தது. அப்போது உருவான மக்கள் புரட்சியால் கடாஃபி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
இந்த அசாதாரணமான சூழலில் பெங்காஸி நகரம் முழுவதும் வன்முறை வெடித்தது. 2011, மே 25 அன்று கொள்ளையர்கள் தேசிய வங்கியை கொள்ளையடித்தனர் ஆனால், அக்டோபர் வரை கொள்ளையடிக்கப்பட்ட செய்தி வெளியில் தெரிவிக்கப்படவில்லை. ஏனென்றால் கிளர்ச்சியின் ஒரு பகுதியாக வங்கி தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகத்தான் பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். பின்புதான் அது ஏதோ ஒரு கொள்ளைக் கும்பலின் திட்டமிட்ட சதி என்பது கண்டறியப்பட்டது.
2011-க்குப் பிறகு எகிப்தின் சந்தையில் சில பண்டைய கிரேக்க நாணயங்கள் விற்கப்பட்டதாகச் செய்திகள் உண்டு. ஆனால், யாரும் பிடிபடவில்லை கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என்று உலகமே காத்திருக்கிறது. ஏன் என்றால் 2011-ல் பாரிஸில் அதிகாரபூர்வமாக நடத்தப்பட்ட ஏலம் ஒன்றில் பண்டைய கிரேக்க நாணயம் ஒன்று 4,31,000 டாலர் மதிப்புக்கு விலை போயிருக்கிறது. இதைக் கொண்டு பெங்காஸி பொக்கிஷங்களின் மதிப்பை உணர்ந்துகொள்ளலாம்.
உலகில் இதுவரை தொல்லியல் பொக்கிஷங்கள் பலவும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. அதில் மிகப் பெரிய கொள்ளைச் சம்பவம் இது என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.