பெங்களூரில் இருந்து காரைக்காலுக்கு செல்லக்கூடிய பயணிகள் ரயில் கிருஷ்ணகிரி காடுசெட்டிபட்டி என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அந்த வழித்தடத்தில் சுமார் மூன்று மணி நேரமாக போக்குவரத்து தாமதமாகி வருகிறது.
பெங்களூரில் இருந்து நாள்தோறும் ஓசூர் தர்மபுரி சேலம் வழியாக காரைக்காலுக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல் தனது சேவையை தொடங்கிய இந்த ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் காடுசெட்டிப்பட்டி என்ற பகுதியில் வந்துகொண்டிருந்தபோது ரயில் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம் புரண்டன.
ரயில் மிதமான வேகத்தில் இயக்கப்பட்டதால் பெருமளவில் இந்த விபத்தில் பாதிப்பு ஏதுமில்லை. இந்தப் பாதை ஒருவழிப் பாதை என்பதால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தடம்புரண்ட ரயிலை மீட்கும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.