கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில், 12 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் அகழ்வைப்பகத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கீழடியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்த நிலையில், 6ம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணியின்போது கண்டெடுக்கப்பட்ட குவளை, முதுமக்கள் தாழிகள், ஓடுகள், பானைகள், வளையல்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்களின் பார்வைக்காக வைக்க, அங்கு அகழ் வைப்பகம் அமைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தினர். அதன்படி கீழடியில், 12 கோடியே 21 லட்ச ரூபாய் மதிப்பில் அகழ்வைப்பகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில், அகழ் வைப்பகம் பணிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், தொல்லியல்துறை ஆணையர் உதய சந்திரன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version