புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் 10 வகையான பிளாஸ்டிக்கிற்கு பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்தது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க அரசு முடிவு செய்தது. அதனடிப்படையில் தடை விதிக்க பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், எடுத்துச் செல்லுதல், விற்பனை செய்தல், சேகரித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு இன்று முதல் கட்டாயம் தடைவிதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதற்கு மாற்றாக 8 வகையான பொருட்களை மக்கள் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அரசின் இந்த தடை ஆணையை மீறுபவர்கள் மீது சட்டவிதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக 5 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.