தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், பால், தயிர், எண்ணைய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வரவுள்ள நிலையில், தடையை மீறிவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்களும் வணிகர்களும் வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.