அரசு கட்டித்தந்துள்ள கழிவறைகளில் விழிப்புணர்வு ஓவியங்கள்!

அனைவரும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி மாவட்ட ஊராட்சிகளில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படுவது அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது.

தேனி மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அனைவருக்கும் கழிவறை கட்டித்தர ஏற்பாடு செய்யப்பட்டு 70 சதவிகித கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆயினும் கிராமப்புறங்களில் அதிகமான மக்கள் திறந்தவெளிகளை கழிப்பிடங்களாக பயன்படுத்தி வருவது மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து கிராமப்புறங்களில் கட்டிக் கொடுக்கப்பட்ட கழிவறைகளில் விழிப்புணர்வு வண்ண ஓவியங்களை வரைய தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி உத்தரவிட்டார். இந்தப் பணியை செய்துத்தர தொண்டு நிறுவனம் ஒன்று முன்வந்தது. இதையடுத்து, தற்போது கடமலை, வருஷநாடு உள்ளிட்ட 130 ஊராட்சிகளில் அரசு மூலமாக கட்டித்தரப்பட்ட கழிவறைகளில் ஓவியங்களை வரையும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தேனியில் அரசு முன்னெடுத்துள்ள விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணிகள் ஒரு சில ஊராட்சிகளில் நிறைவு பெற்றுள்ளன. வீடுகள்தோறும் வரையப்பட்டுள்ள இந்த வண்ண வண்ண ஓவியங்கள் காண்போரை கவரும்விதமாக உள்ளது.

நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தி வரும் மத்திய அரசு, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத தேசத்தை உருவாக்கும் முனைப்பில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கழிவறைகள் இல்லாத கிராம மக்களுக்கு அவை கட்டித்தரப்படுகின்றன. அவற்றை முறையாக பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறித்து கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

 

Exit mobile version