மெக்சிகோவில் ஆயிரம் ஆண்டு பழமையான அரண்மனை கண்டுபிடிப்பு

மெக்ஸிக்கோவின் பிரபல சுற்றுலாத்தலமான கேன்கூனில் (Cancun) ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரண்மனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அரண்மனையானது சுமார் 6 மீட்டர் உயரத்தில் 825 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் உறுதியாக அமைக்கப்பட்டுள்ள இந்த பழமை வாய்ந்த அரண்மனையானது, கி.பி. 600 ஆம் ஆண்டுக்கும் 1050 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தின்போது மனிதர்கள் வசிக்க இருப்பிடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆயிரம் ஆண்டு பழமையான இந்த அரண்மனை மாயன் ஆட்சிக்காலத்தின் போது கட்டப்பட்டுள்ளது. மாயன் ஆட்சிக்காலம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரிகம் ஆகும். தற்போது மாயன் நாகரிகம் என்பது முற்றிலும் அழிந்துள்ளது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டிடக்கலை அமைப்பது மாயன் இனத்தவரின் சிறப்பாகும்.

இவர்கள் காலத்தின் போது கட்டப்பட்டுள்ள இந்த பழமையான அரண்மனையை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த அரண்மனையைச் சுற்றியுள்ள இடத்தில் வேறு சில கட்டடங்களையும் சிதைவுகளையும் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவ்விடத்தின் சிதைவுகளை முழுமையாக கண்டெடுக்கும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள் ஆய்வாளர்கள்.

Exit mobile version