ஏஆர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – அரசு தலைமை வழக்கறிஞர் வலியுறுத்தல்

அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குனர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வலியுறுத்தபட்டுள்ளது.

 நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளியன்று திரைக்கு வந்த,சர்க்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும்,அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கொச்சைப்படுத்தி காட்சிகள் இருந்தது.அதேபோல, அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் முருகதாஸ் படம் இயக்கி உள்ளதாக, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திலும் முருகதாஸ் மீது புகார் கொடுக்கப்பட்டது.இந்நிலையில், தன்னை காவல்துறை எந்நேரமும் கைது செய்யலாம் என்ற பயத்தில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகதாஸ் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.முருகதாஸை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை இன்றோடு நிறைவடைய இருந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன்,சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அரசு தரப்பில் கோரிக்கை வைத்தார்.இதுதொடர்பாக, முருகாதாஸிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டுமென அவரது வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version