பாடலாகும் நா.முத்துக்குமாரின் இன்னொரு கவிதை

பெரும் இசையரவம் ஏதுமின்றி ஏ.ஆர்.ரகுமான் அளிக்கும் அத்தனை பாடல்களுமே ஒரு தனிச்சுவைதான். சமீபத்தில் வைரமுத்துவின் மழைக்குருவி, 2.0 வில் நா.முத்துகுமாரின் புள்ளினங்காள் என இடைவிடாது இதயம் வருடும் ஏ.ஆர் ரகுமான் இப்போது மீண்டும் நா.முத்துக்குமாரின் கவிதையோடு இசை கலக்கிறார்.

சர்வம் தாள மயம் படத்தின் பாடலாக இந்த  ‘மாயா மாயா’ வந்திருக்கிறது. ரஹ்மானின் அவசியம் இன்னும் இருக்கிறது என்று எல்லோர்க்கும் அறிவிக்கும் ஏகாந்த வரவு இந்தப்பாடல்

“மாயா மாயா மனமோகனா” என்று பாடல் தொடங்குகையில் தொற்றிக்கொள்கிறது நமக்குள்ளும் காதல். மனமோகனா எனத் தொடருவதால் நமது ஆண்டாள் பாசுரங்களின்  நீலநிறக்காதலை நினைவூட்டுகிறது. அதை வைத்தே பல்லவி எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார்.

ஒரு எடுத்துக்காட்டுக்கு, காதலனை நினைத்து காதலி உறங்காத தவிப்பை சொல்லும் நா.மு

செடி கொடி இலை உறங்க
சினுங்கிடும் நதி உறங்க
மலைகளில் முகில் உறங்க
மைவழி மட்டும் கிறங்க 
ஏகாந்த இரவும்
எரிகின்ற நிலவும்
தனிமையில் மட்டும் வாட்டும் .., என்று தன் கவிதை வண்ணத்தால் பழைய சூழலுக்குப் புதுச் சாயம் பூசும் அழகு நா.முத்துக்குமாரின் மீதான மரியாதையையும் காதலையும் மடங்குகளில் அதிகரிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

மொத்தத்தில் எதிர்வரவிருக்கும் இந்தப்பாடல் இசை விருந்தும்  கவி விருந்தும் கலந்து நமக்கு இன்னொரு செவி விருந்து என்கிறார்கள் ரசிகர்கள்.

Exit mobile version